என்னது இதில் இவ்வளவு கெட்டதா !!! சித்தர் கூறிய உணவு உண்ணும் முறை..

        நாம் நம் உடலிலுள்ள செல்களுக்கு சக்தி கொடுக்கவும், உடலுக்கு புத்துயிர் ஊட்டவும் நாம் உணவினை உட்கொள்கிறோம். நம் முன்னோர்கள் எவ்வாறு உணவு உட்கொள்ள வேண்டும் என்னும் வழிமுறையை வகுத்துள்ளனர். ஆனால் அது காலப்போக்கில்  அயல்நாட்டு  உணவு பழக்கத்தால் மறந்துவிட்டது. துரித உணவு, சரிவிகித உணவு இல்லாமை, தவறான உணவு பழக்கம் ஆகியவற்றால் நாம் உண்ணும் உணவே நமக்கு நோயாக மாறுகிறது. எனவே நம் முன்னோர்கள் வகுத்துள்ள உணவு உண்ணும் முறையும், உணவு உண்ணும் போது செய்யக்கூடியவையும், செய்யக்கூடாதவையும் பற்றி இன்று காண்போம். 

Table Of Content 

இயற்கை உணவு :



               இயற்கை உணவான பச்சை காய்கறிகள், பழ வகைகள், கீரை வகைகள் போன்றவற்றை  உணவாக உட்கொள்ளலாம். ஏனென்றால் இயற்கை உணவினை சமையல் உணவினை போல எளிதாக உட்கொள்ள முடியாது. அதனால் இயற்கை உணவினை அளவோடு தான்  உட்கொள்ள முடியும். இயற்கை உணவு பற்றிய காந்தியின் கருத்து "சூரியன் தான் சிறந்த சமையற்காரன், ஏனென்றால் சூரியனில் வெந்த உணவினை உண்டு  எல்லா உயிரினங்களும் நன்றாக வாழ்கிறது. அதுபோல மனிதனும் சூரியனின் வெப்பத்தால் வெந்த உணவினை உண்டால் நோய் நொடி இல்லாமல் வாழ்வான்" ,  என்று காந்தியடிகள் கூறியுள்ளார்.
   

தமிழரின் உணவு பழக்கம் :

            நாம் உண்ணும் உணவான வெள்ளை அரிசி தமிழரின் பாரம்பரிய உணவு அல்ல. இந்தியாவில் பசுமைபுரட்சியின் பின் உணவு உற்பத்தி அதிகரித்தது பஞ்சம் போக்க அயல்நாட்டு நவீன முறை மூலம் வெள்ளை அரிசி உற்பத்தியை அதிகரித்தனர்.  நம் முன்னோர்கள்  சிவப்பு அரிசியான நெல்லினையே உணவாக உட்கொண்டனர்.  நெல்லின் மேல் தோல் (உமி) நீக்கப்பட்டு மற்றும்  நெல்லின் கீழ் தோல் (தவிடு) நீக்கப்பட்ட பின் பாலிஸ்ட் செய்து கிடைக்கும் சக்கையே நாம் தற்போது பயன்படுத்தும்  வெள்ளை அரிசி.

         மேலும்  நம் முன்னோர்கள்  வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தவில்லை, அதற்க்குப்பதிலாக கரும்பு சர்க்கரை மற்றும் பனை மரத்திலிருந்து கிடைக்கும் கருப்பட்டி போன்றவற்றையே பயன்படுத்தினர்.  மேலும் தினை, கேழ்வரகு, பனிவரகு, கருவரகு, சாமை, கம்பு மற்றும் முக்கனிகளான மா, பலா, வாழை போன்றவற்றையும் பயன்படுத்தினர்.


சித்தர் கூறும் உணவு உண்ணும் முறை :


                                                           "பசித்து புசி"

    சித்தர்களுள் ஒருவரான தேரையர் சித்தர் பசி எடுக்கும் போது மட்டும் உணவு உண்ண வேண்டும் என்கிறார். இரு வேலை மட்டும் உணவு உண்ணலாம் என்று கூறும் சித்தர் அவ்வாறு மூன்று வேலை உணவு உண்ண வேண்டும் என்றால், முதல் வேலை உணவு சூரியன் உதயமாகி ஒன்றரை மணி நேரத்திற்க்குள்ளும்,   இரண்டாம்  வேலை உணவு சூரியன் உதயமாகி ஆறு மணி நேரத்திற்க்குள்ளும், மூன்றாம்   வேலை உணவு சூரியன் அஸ்தமனமாகி மூன்று  மணி நேரத்திற்க்குள்ளும் உண்ண வேண்டும். 

     பழந்தமிழர் சுவையை ஆறாகப்பிரித்தனர், மற்றும்  இந்த அறுசுவையையும் அன்றாடம் தன் உணவில் சேர்த்தனர்.  இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு இவையே அறுசுவையாகும். உணவு உண்ட பின் இனிப்பு மற்றும் பழங்கள் உண்ண கூடாது, அவற்றை உண்டால் ஜீரணகோலாறு உண்டாகும். நாம் எப்போதும் அரை வயிறு  உணவு, கால்   வயிறு மோர், நீர் பருகலாம். முழு வயிறு  உணவு உண்டால் ஜீரணிக்க தேவையான அக்னியும், வாயுவும் சஞ்சரிக்க இடமில்லாமல் ஆகிவிடும்.


உணவு  உண்ணும் போது செய்ய வேண்டியவை :


        

            தற்காலத்தில் அதிகபட்சம் அனைவரது வீட்டிலும் உணவருந்தும் மேசை (Dinning Table) இருக்கும். அது நம் வீட்டில் இருப்பது கௌரவம் என எண்ணுகின்றனர்.

                                        "குந்தித் தின்றால் குன்றும் மாளும்"

        ஆனால் நம் பழந்தமிழர் தரையில் சம்மணம் இட்டு அமர்ந்து வாழை இலையில் தான் உணவு உண்ணுவர். சம்மணம் இட்டு சாப்பிடுவதால் இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்கு வரும். அதனால் நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானம் அடையும். ஆனால் நாம் உணவருந்தும் மேசையில்  அமர்ந்து உணவு உண்ணுவதால் இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்கு வராமல் புவியீர்ப்பு விசையால் நமது பாதங்களுக்கு சென்றுவிடும். அதனால்  உணவு செரிமானம் அடைவது தாமதம் ஆகும். மேலும் சம்மணம் இட்டு சாப்பிடுவதால் கால் மூட்டு வலுபெறும். இல்லாவிடில் வயோதிக வயதில் மூட்டு தேய்மானம் அடைந்து மூட்டு வலி ஏற்படும்.


உணவு  உண்ணும் போது செய்ய கூடாதவை  :


        நம் வாயில் உள்ள உமிழ்நீர் உணவு முறிவிற்க்கு பயன்படுகிறது, எனவே தான் உமிழ்நீர் செரிமானத்தின் முதல்படி என்பர். நாம் உணவு  உண்ணும் முன் நீர் பருகினால் உமிழ்நீர் வலுவிழந்து உணவு முறியாமலேயே இரைப்பையினுள்ளே செல்லும். இது செரிமானத்தை மேலும் கடினமாக்கும். மேலும் நம் இரைப்பையினுள் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் செரிமானம் செய்யவும், உணவின் மூலம் உள் வரும் கிருமிகளை சிதைக்கவும் பயன்படுகிறது. உணவு  உண்ணும் முன் நீர் பருகினால் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வலுவிழந்து உணவு செரிமானம் அடையாமல் கொழுப்புகளாக மாறி உடலிலே தங்கிவிடும்.

இதனால் உடல் பருமனும் அதிகரிக்கும்இன்சுலின் அளவும் அதிகரிக்கும். உணவில் உப்பின் அளவை குறைப்பதால் தாகம் எடுக்காது. மேலும் உணவு  உண்பதற்கு  முன், பின் அரை மணி நேரம் கழித்து தான் குளிக்க வேண்டும். ஏனென்றால் குளித்தால் உடலின் வெப்பம் தனிந்து செரிமானத்திற்க்கு தேவையான வெப்பம் உடலினுள் இருக்காது. உணவு  உண்ட பின் உடற்பயிற்சி செய்யக் கூடாது, ஏனென்றால் இரத்த ஓட்டம் உடற்பயிற்சி செய்யும் இடத்திற்கே செல்லும்  வயிற்றுப்பகுதிக்கு வராது. எனவே செரிமானம் தாமதமாகும்.  


நம் உணவுப்பழக்கத்தில் உள்ள கெடுதல் :

        


நெல்லின் ஒரு பகுதியே வெள்ளை அரிசி, வெள்ளை அரிசியினால் இன்சுலின் அளவு அதிகரிக்கும். வெள்ளை அரிசி ஹை கிளைசிமிக் இன்டெக்ஸ் ஆகும். அதாவது ஹை கிளைசிமிக் இன்டெக்ஸ் என்றால் உணவின் இரத்த குளுக்கோஸ் அளவினை எவ்வளவு வேகமாகவும், எவ்வளவு உயர்த்தும் என்பதாகும். வெள்ளை அரிசியை உணவில் எடுத்துக்கொண்டபின் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இதனால் இன்சுலின் அளவு அதிகரிக்கும்,


     இன்சுலின் ட்ரிப்டோபேன் ஹார்மோனை சுரக்கும், ட்ரிப்டோபேன் செரட்டோனின் ஹார்மோனை சுரக்கும், செரட்டோனின் பீனியல் சுரப்பில் சுரக்கும் இருள் ஹார்மோன் அல்லது தூங்கும் ஹார்மோன் என்றழைக்கப்படும் மெலட்டோனினை சுரக்கும். மெலட்டோனின் இரவு நேரத்தில் சுரக்கும் மற்றும் இது உறங்க வைக்கும் ஹார்மோன் ஆகும். இவை அனைத்தும் இரத்த குளுக்கோஸின் அளவு திடீரென அதிகரிப்பதால், மூளையின் கட்டளையால்  சுரக்கும் ஹார்மோன்களாகும். ஹை கிளைசிமிக் இன்டெக்ஸ் வகை அரிசிகளே இப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும், ஆகையால் லோ கிளைசிமிக் இன்டெக்ஸ் வகை அரிசிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

புதியது பழையவை